வெள்ளி, செப்டம்பர் 22, 2017

நீதிபதிகள் பற்றாக்குறையா ?


நமது நாட்டில் நீதி மன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறதே.... ஸாரி நம்மைக் கடந்து போகிறதே... இது நமக்கு எதைக் காட்டுகிறது ? நீதிபதிகளின் பற்றாக்குறையையா ? இல்லை சண்டைகளும், பிரச்சனைகளும் வளர்ச்சியா ? இந்த அவல நிலைக்கு முடிவு நிச்சயமாக அரசாங்கம் தீர்வு காணாது மக்களான நாமே தீர்வைத் தேடிக்கொள்ள வேண்டும் எப்படி ? ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை கட்டுப்பாடு மீறிப்போய் வசைபாடியில் தொடங்கி அடிதடியில் முடிந்து விட்டது பிரச்சனையை காவல் நிலையம் வரை கொண்டு போய் எதைக் கண்டோம் ? அவர்களும் எஃப்.ஐ.ஆர் எழுதி நீதி மன்றத்தில் கொண்டு போய் சேர்த்து விட்டு அடுத்த எப்.ஐ.ஆர் எழுத தயாராகி விடுவார்கள் அவர்களையும் குறை சொல்ல இயலாது காரணம் அது அவர்களது கடமை நாமும் பகைமை உணர்வுடன் வீட்டுக்கும், நீதி மன்றங்களுக்கும் அலைந்து கொண்டு இருப்போம்.

வழக்கறிஞர்கள் மோதிக்கொள்வது போல கதையளக்க, நீதிபதிகளும் அடிக்கடி இடைவேளை விட்டு தயிர்வடை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். காலங்கள் உருண்டோடும் வழக்கறிஞர்களின் வாரிசுகளும் வழக்கறிஞர் பட்டம் பெற்று விடுவார்கள். ஏதோவொரு திரைப்படத்தில் சொன்னது போல வாதியும், பிரதியும் இறந்து விடுவான் வழக்கறிஞர் வயலை உழுது கொண்டு இருப்பான் இது எத்தனை தூரம் உண்மையாகி விட்டது ஆனால் இப்பொழுது வழக்கறிஞர் வயலை ப்ளாட் போட்டு விற்று விடுவான். நம் முன்னோர்கள் சொன்னது போல் சாட்சிக்காரன் காலில் விழுவதற்கு சண்டைக்காரன் காலில் விழலாம் ஆம் ஆயிரம் பிரச்சனைகளை வளர்த்து நமது சந்ததிகளுக்கு தாரை வார்த்து விடாமல் வாழ வழி கண்ணியம் தவறாமை ஆம் சண்டையும், சச்சரவுகளும் பேசித்தீர்ப்போம் தவறுகளை மறப்போம், மன்னிப்போம் தவறு செய்வது மனித இயல்பு.

1999-ஆம் ஆண்டு HUMAN RIGHT CUMMISSON REPORTபடி இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? பதினான்கு லட்சங்கள் ஆகவே வாழும் காலம் கொஞ்சமே.... போகும் காலமோ.... ? ? ?   

புதன், செப்டம்பர் 20, 2017

விதண்டாவாதிகள்


தம்பி உங்க பேரென்ன ?
ஏன் ?
இப்படியும் ஒரு பேரா ?
? ? ? ஆமா... உங்க பேரென்ன ?
நீ எதுக்கு கேட்கிறே ?
பேரு வித்தியாசமா இருக்கே...
? ? ?
0--------------------------------------------------------1

கடை ஏன் அடைச்சிருக்கு... ?
பூட்டியிருக்கிறதாலே...
? ? ? அப்படியா ?
ஏன்... கேட்கிறீங்க... ?
பூட்டியிருக்கிறதாலதான்...
? ? ?
0--------------------------------------------------------2

மதுரைக்கு எந்த வண்டியில போகணும் ?
மதுரை வண்டியிலதான்.
? ? ? இந்த வண்டி எங்கே... போகுது ?
மதுரைக்குத்தான்.
நல்லது.
இந்த வண்டியில, எதுக்கு போறீங்க ?
மதுரை வண்டியை பிடிக்கத்தான்.
? ? ?
0--------------------------------------------------------3

மச்சான் அல்வா வாங்குங்களேன்...
கையில காசு இல்லை.
பைக்கு உள்ளே இருகிற அல்வா யாருக்கு ?
யாருக்கோ...
அந்த யாருக்கோ.... யாரு ?
உங்க அக்காதான்.
இதைத்தானே எதிர் பார்த்தேன்.
? ? ?
0--------------------------------------------------------4

உங்கள்ட்ட ரெண்டு ஐம்பது இருக்குமா ?
இல்லையே என்ன விசயம் ?
இருந்தால் ஒண்ணை வாங்கிகிறலாமேனுதான்.
? ? ? உங்கள்ட்ட  Credit Card இருக்கா ?
இல்லையே என்ன விசயம் ?
இருந்தால் பர்ஸேசிங் செய்யலாமேனுதான்...
? ? ?
0--------------------------------------------------------5


Chivas Regal சிவசம்போ-
நாட்டுல நிறையப்பேரு இப்படித்தான் திரியிறாங்கே....

திங்கள், செப்டம்பர் 18, 2017

அழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்


ஒருமுறை 2005 என்று ஞாபகம் அதாவது எனது மனைவி மறைந்து ஐந்து வருடமிருக்கலாம் அபுதாபியில் தமிழ் உணவகம் ஒன்றில் உணவருந்த போனேன் எனது பக்கத்து டேபிளில் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் அப்பொழுது இரண்டு நண்பர்கள் வந்தார்கள் வந்தவர்கள் அவரின் டேபிளில் உட்கார்ந்தார்கள்.

பெயர் வேண்டாமே ஊரைச் சொன்னாலும் பெயரைச் சொல்லக்கூடாது என்பார்கள் பேசும்பொழுது அவரின் ஊர் திருவாரூர் என்று அறிந்து கொண்டேன்
என்னங்க.... நல்லாயிருக்கியலா...
நலகுசலங்கள் முடிந்தது நான் அடுத்த டேபிள் என்பதால் அவர்கள் பேசுவது அனைத்தும் எனக்கு கேட்டது மூவரும் பேசியது...

ஊருக்கு போறீங்களாமே....
ஆமா அடுத்த வாரம்.
ஏதும் விஷேசமா
ஆமா கல்யாணம் வச்சு இருக்காங்க.... புள்ளைய பார்த்துக்கிறவும் ஆளு வேணுமுள்ள... குழந்தையை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு...
ஆமா.. ஆமா.. புள்ளையை வளர்த்துத்தானே ஆகணும்..
அதான் ரெண்டரை மாச லீவுல போறேன்..
நல்லது நல்லபடியா போயி கல்யாணத்தை முடிச்சிட்டு வாங்க... ஆமா நீங்க ஊருக்குப் போயிட்டு வந்து எவ்வளவு நாளாச்சு
அஞ்சு மாசம் ஆச்சு என் மனைவி இறந்ததுக்கு ஒரு வாரம் எமர்ஜென்ஸி லீவுலதானே போனேன்.
அப்படியா...
சரி பார்ப்போம் நான் பில் கொடுக்கிறேனே....
வேண்டாம், வேண்டாம் ஊருக்குப் போயிட்டு வந்து பார்ட்டி வையிங்க..
கண்டிப்பா... சரி வாரேன்..
நல்லது.

அவர் பணத்தை கொடுத்து விட்டு வாசலைக்கூட கடந்து இருக்க மாட்டார்.....
..... இவனையெல்லாம் ......... நண்பர்களே டைப்ப முடியாத வார்த்தைகள்

விடுய்யா... இவங்கே இப்படித்தான்....
என்னையா... கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா... வருஷம்கூட திரும்பலையா.....
நீ ஏன் டென்ஷனாகுறே...
அவன் சொல்ற காரணத்தைப் பார்த்தியா... குழந்தையை வளர்க்க ஆளு வேணுமாம் அஞ்சு மாசமா பச்சைப் புள்ளயை வளர்த்தவங்களுக்கு இனிமேல் முடியாதா வர்றவ உடனே பால் கொடுத்து வளர்த்துடுவாளா
விடு விடு ஏதோ உப்புக்கு சப்பாணி கதை சொல்றான்.
இவனெல்லாம் அந்தக் குழந்தையை கடைசிவரை பார்ப்பானு சொல்றே...
எல்லாம் மேலே உள்ளவன் தீர்மானிக்கிறான் அந்தக் குழந்தை நல்லபடியாக இருக்கணும்னு வேண்டிக்கிருவோம் நம்மளால் முடிந்தது
இவன் கல்யாணம் செய்யிறது தப்புனு நான் சொல்லலையா... கண்டிப்பாக வாழ்க்கைத்துணை வேணும் இல்லைனா மனுஷன் கிறுக்கனாயிடுவான் இருந்தாலும் ஒரு வருஷம் போனபிறகு செய்தாலும் பரவாயில்லை அதை விடக் கொடுமை இவன் சொன்ன காரணம்தான் எனக்கு பத்திக்கிட்டு வருது...
அவன் வேண்டாம்னு சொன்னாலும் வீட்ல பொம்பளைங்க சும்மா இருக்க விடமாட்டாங்க..
இருக்கட்டுமே சமாளிக்க முடியாதா இங்குதானே இருக்கான் கம்பெனி லீவு கொடுக்கலை அப்படி இப்படினு சொல்லக்கூடாதா இவனுக்கு ஆசை வேறென்ன...
இவன் உடன்படாமலா கல்யாணம் நடக்கும்.
எப்படிய்யா அவன் பொண்டாட்டியோட எலும்புக்கூடு இன்னும் மண்ணு தின்னு இருக்காது... ச்சே...
நீ ஏன் கோபப்படுறே... உன் தங்கச்சியா... பேசாமல் சாப்பிடு
தன்கூட படுத்தவ மண்ணுகுள்ளே போயிட்டாளேனு... எண்ணமே வராதா... எப்படி அதை உடனே மறந்துட்டு அடுத்தவ கூடபடுக்கிறாங்கே... மனசு உறுத்தாதா... மனசாட்சியே இல்லையா
சாப்பிடு, சாப்பிடு... மனசாட்சி எவனுக்கு இருக்குது எல்லாப் பயலுக்கும் மனசாட்சி இருந்தால் ஒருத்தன்கூட கட்சியில இருக்க மாட்டான், நாடு உருப்படும் நாமளும் இப்படி அடுத்த நாட்டுக்கு வர வேண்டியதிருக்காது.
இவனுக்கு பொண்ணு கொடுக்கிறானே... அவனைச் சொல்லணும்.
என்ன செய்யிறது அவங்க குடும்பச்சூழல் அவங்களுக்குத்தான் தெரியும் வரதட்சிணையின்னு இருக்குலே... முடியாத பட்சத்தில் இப்படித்தான்.
ச்சே என்ன... மனுஷங்கே...

அவரது வாயிலிருந்து நிமிடத்துக்கொரு முறை எழுத முடியாத வார்த்தைகள் வெளியில் வந்து விழுந்து கொண்டே இருந்தது இவர்களுக்காகவே நானும் மீண்டுமொரு தோசை சொல்லி விட்டு நேரத்தைக் கடத்திக்கொண்டு இருந்தேன் அவனது கண்களை ஊடுறுவிப் பார்த்தேன் அதில் சுயநலமில்லாத ஒரு கோபம் தெரிந்தது நிச்சயமாக சுயநலமில்லை பொதுநலமே காரணம் இவன் யாரோ... அவன் யாரோ... இருவருமே ஜாதி, மதம், ஊர் வேறுபட்டவர்கள் என்பதை அவர்களின் பேச்சின் ஊடே கவனித்தேன் இருப்பினும் இவனுக்கு கோபம் சமூக கோபம், நியாயமான கோபம்தானே.... மறைந்துபோன முகமறியா அந்தச் சகோதரியின் ஆன்மா சாந்தியும் சமாதானமும் அடைய வேண்டுமென மனதுக்குள் வேண்டிக் கொண்டேன் என்னால் முடிந்தது இவ்வளவுதானே.. வேறென்ன செய்யமுடியும்... இந்தக்கோபம் நியாயமே... ஆனால் சமூகம் இவனது கோபத்தை ஏளனமாக பார்த்து சிரிக்கும் என்பது எனக்குத் தெரிந்தாலும் பின்னாளில் நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன் ஏன்... இன்றுவரை காரணம் நானும் இவரின் ஜாதிதானே.... நான் மறுமணம் செய்யாமல் போனதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் என்னிடம் உண்டு அவைகளை எழுதினால் ஐநூறு பதிவுகளே எழுத முடியும் அந்த ஆயிரம் காரணங்களில் இதுவும் ஒன்று நான் ஏற்கனவே ஒரு பதிவில் கேட்டது போல்

பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புதுமாப்பிள்ளை ஆகிடுறான் ஆனால் புருஷன் செத்துட்டா பொண்டாட்டி புதுப்பெண்ணாக ஆவதில்லையே ஏன்
இந்த நிலையில் மாற்றம் வரும் பொழுது என் மனதிலும் மாற்றம் வரலாம்
அழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்

அதை கழுவ முடியாத நான் எனது கைகளை மட்டும் கழுவி விட்டு வெளியேறினேன் அவர்கள் இன்னும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள், அதில் அவரின் கண்களில் தீ எரிந்து கொண்டிருந்தது.

சனி, செப்டம்பர் 16, 2017

அறியாமைகள்


சமீபத்தில் கணினியில் உலாவும் பொழுது பழைய செய்தியொன்றை படித்தேன் படித்ததும் மனம் வலித்தது ஒரு திரைப்பட நடிகர் காதலித்து திருமணம் செய்த தன் மனைவிக்கு 40 கோடி ரூபாயை நஷ்டஈடாக கொடுத்து விவாகரத்து செய்ய முன்வந்துள்ளார். காரணம் வேறொரு நடிகையுடன் காதல், இவர்களின் காதலைப்பற்றி, நாம் ஆராய வேண்டாம் அது நாய்க்காதல் என்று சொல்வார்களே... அதைப் போன்றது.

சரி இந்த 40 கோடியை சர்வ சாதாரணமாக நஷ்டஈடு கொடுக்க முன் வந்ததற்கு அடிப்படை காரணர்த்தா யார் ? இந்த மாதிரி ஆட்கள் கைவண்டி இழுத்து சம்பாரித்து இருந்தால் இப்படி கொடுக்க முடியுமா ? காதலுக்காக நாற்பது கோடியென்ன ? அதைவிட உயர்வான உயிரைக்கூட கொடுக்கலாம்  ஏன் காதலி மும்தாஜூக்காக ஷாஜஹான் அற்புதமான தாஜ்மஹாலை கொத்தனார் மூலம் கட்டவில்லையா ?

நாட்டில் ஒரு வேளை குடிக்க பால் இல்லாமல் எத்தனை குழந்தைகள் நலிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது பரம்பரை பணக்காரர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் போக சாத்தியம் உண்டு. ஆனால் இவர்களைப் போன்ற ஆட்களுக்கு கண்டிப்பாக தெரியும் ஏனெனில் திரைப்படங்களில் ஏழைப்பங்காளனாக, உழைப்பாளியாக, காதலுக்காக, காதலிக்காக போராடுபவனாக, ராணுவவீரனாக, விவசாயியாக, ஏன் கைவண்டி தொழிலாளியாக கூட உணர்வுப்பூர்வமாய் நடித்து காண்பிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி தெரியாமல் இருக்கும் ?


இந்த நிலைக்கு இவர்களை உயர்த்தி விட்டது தவறில்லை இவர்களின் சுயமுகம் தெரிந்த பிறகும் இவர்களை உயர்த்திக் கொண்டு இருக்கும் ரசிகன் என்ற அறியாமைவாதிகள் இருக்கும்வரை இந்த மாதிரியான நாய்க்காதல் மலர்(ல்லா)ந்து கொண்டே இருக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

என் நினைவுக்கூண்டு (6)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் தற்பொழுது உனது அடையாளங்கள் மறைந்து வருகிறது என் நெஞ்சில் மட்டும் பசுமையாய்... நீ

 னிதா உனது மறைவு மற்றவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல ஆனால் எனக்கு வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது எனக்கு சோசியத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் உனது ராசிப்படி சகோதரர்களில் எனக்கு செல்வந்தனாகும் அமைப்பு இருப்பதாக பலரும் பலமுறை சொல்லி இருக்கின்றார்கள் அதனால்தான் உனக்கு மருத்துவ செலவுகளை நான் செய்தேன் என்று நினைத்து விடாதே... அந்த பாசம் எனது குருதியில் கலந்தது நான் மறையுமவரை உன் நினைவுகள் எனது நெஞ்சில் இருக்கும். உண்மையில் உனது மறைவுக்குப் பிறகு எனக்கு பணவிரயம் மட்டுமே என்னை இப்பொழுது ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கிறது.

உனது நெற்றியில் வைக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை நான் போராடி வாங்கிக் கொண்டேன் உனது நினைவாக என்னிடம் இருக்கட்டும் என்று இதை உறவுகள் தவறு என்றும், இதனால் எனக்கு தீங்குகள் வருமென்று சொல்லி அந்த நாணயம் சுடுகாட்டில் இடவேண்டிய பொருள் என்றும் மேலும் அதை யாரும் எடுக்ககூடாது என்று சொன்னார்கள் உண்மையில் எனது கருத்துப்படி அந்த நாணயத்தை அனைவருமே எடுத்து புழங்கி இருக்கின்றோம் ஆம் சுடுகாட்டில் வாக்கரிசி போடும் பொழுது அனைவரும் நாவிதர் வேலை செய்பவருக்கு அரிசியோடு சேர்த்து காசு போடுவார்கள் முடிவில் நெற்றியில் இருக்கும் காசையும் நாவிதர் எடுத்துக்கொள்வார் இதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அந்த காசுகளை நாவிதர் தனது செலவுக்கு விடும்பொழுது அந்தப்பணம் ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி அனைவருடைய கையிலும் புழக்கத்கிற்கு வந்து செல்லும் இந்த காசு போட்டவருக்கே திரும்பவும் வந்து இருக்கலாம் இதன் காரணமாகத்தான் உனது நெற்றிக்காசை நான் ஞாபகார்த்தகமாக வைத்துக்கொள்ள விரும்பினேன். அதேநேரம் உறவுகள் சொன்னது இறந்தவர் கையில் பணக்கட்டை கொடுத்து பிறகு வைத்துக் கொண்டால் அவர்கள் நிரந்தரமாக செல்வந்தர்களாக இருப்பார்கள் என்று சொன்னார்கள் எவ்வளவு இழிவான சுயநல எண்ணங்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை இருப்பினும் எனது வாதம் தவறு என்று உறவுகள் சொல்லி சில ஐயர்களின் ஆலோசனை கேட்டால் ஒவ்வொவரும் ஒவ்வொரு விதமாக சொன்னார்கள் காரணம் சாஸ்த்திரங்கள் என்றுமே ஒரே நிலைப்பாட்டில் தமிழர்களிடத்தில் புழக்கத்தில் இருந்தது இல்லை

பலமுறை நான் கீழக்கரை செல்லும் பொழுதெல்லாம் திருப்புல்லாணி பேருந்து நிலையத்தில் கைகாட்டியில் சேதுக்கரை மூன்று கி,மீ. என்று இருப்பதை பார்க்கும் பொழுது ஒருநாள் கண்டிப்பாக இந்த கடற்கரை சென்று வரவேண்டும் என்று சுமார் முப்பது வருடங்களாக நினைத்துக் கொண்டே வந்து இருக்கிறேன் இதோ இவ்வளவு ஆண்டுகள் கடந்து உனக்கு திதி கொடுப்பதற்காக முதன் முறையாக உனக்காக சேதுக்கரை சென்று வந்த பொழுது மனதில் சிறிய குற்ற உணர்வு இங்கும்கூட சாஸ்த்திரங்கள் என்னை திகைக்க வைத்தன திருமணம் ஆகாமல் நீ இறந்து விட்டதால் ஐயருக்கு வெள்ளியில் செய்த பசுமாடு கொடுக்க வேண்டுமாம். இல்லையெனில் உனது ஆத்மா சாந்தியடையாதாம் இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனினும் உனது ஆத்மா சாந்தியடையாது என்ற வார்த்தைகள் என்னை மனதைக் குடைந்து கொண்டே இருந்தது உனக்காக எவ்வளவோ செலவு செய்தேன் திதிக்கு வேண்டிய சாமான்களும், ஐயரின் தட்சிணையும் சேர்த்து இரண்டாயிரத்தை கடந்து வந்து விட்டது. இந்த வெள்ளியில் செய்த மாடு சுமார் எண்ணூறு ரூபாய்வரை வரலாம் ஒரு மனப்பயத்தில் செய்து விடுவோம் என்ற முடிவில் இருந்தேன் காரணம் எனக்கு எண்ணூறு ரூபாயைவிட உனது ஆத்மா சாந்தியடைவது மிகமுக்கியம் நாத்திகர்களுக்கு மனம் சறுக்கும் முக்கியமான காலகட்டங்கள் இதுதான் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் சில நேரங்களில் மனிதர்களை இப்படி கொண்டு வந்து நிறுத்தி விடும் என்னை பாசம் நம்ப வைத்தது.


தேவகோட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் நானும், பாம்பன் சின்னம்மா மகன் சண்முகம் அண்ணனும் அதிகாலை புறப்பட்டு சேதுக்கரை கிளம்பினோம் போக, வர நூற்றி அறுபது கி.மீ. இராமநாதபுரத்தில் காய்கறி மற்றும் சாமான்களை வாங்கி விட்டு வெள்ளியில் செய்த மாடு வாங்குவதற்கு ஜூவல்லர்ஸ் எதுவுமே திறக்கவில்லை நேற்று இரவு நேரத்தில் ஐயரிடமிருந்து இந்த தகவல் வந்ததால் தேவகோட்டையில் வாங்காமல் இருந்து விட்டோம் நேரம் கடந்து கொண்டு இருந்தது சரியென்று சேதுக்கரை போய் விட்டோம் ஐயரிடம் சொன்னதற்கு பரவாயில்லை என்று சொல்லி விட்டார் கேட்டதற்கு வாங்கி கொடுக்க இயலாதவர்களுக்கு பிரச்சனை இல்லை என்றார். (சாஸ்த்திரங்கள் என்னவானது ?) எனக்கு கோபம் வந்து கேட்டேன் அப்படியானால் இருப்பவர்களிடம் தங்கத்தில் செய்த மாடு கேட்பீர்களா ? என்று ஐயர் எங்களை முறைக்க, பிறகு அண்ணன் என்னை பார்க்க அமைதியானேன் திதிகள் செய்ய வேண்டிய முறைப்படி ஐயர் சொல்ல செய்தேன் அத்தோடு சுடுகாட்டில் உனது நெற்றியில் எடுத்து வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் உறவுகள் சொன்னபடி கடலில் மூழ்கி எழும்போது மனக்கசப்போடு பின்னோக்கி போட்டு விட்டேன். வனிதா உனது ஆத்மா சாந்தியடையும் என்று ஆத்மார்த்தமாய் நம்புகின்றேன் மேலும் உனது மறைவு நாளில் எனது மரணகாலம்வரை என்னால் இயன்ற நல்ல காரியத்தை உனக்காக செய்வேன் என்று உறுதியேற்று தேவகோட்டை நோக்கி பயணித்தேன்.

கூண்டுகள் சுழலும்...
Related Posts Plugin for WordPress, Blogger...